Sunday, May 14, 2006

சிங்கார நகரமாம் சென்னை

கடந்த ஆட்சி காலங்களில் சென்னை மாநகரை அழகு படுத்தும் பொருட்டு கொண்டு வரப்பட்ட திட்டமே சிங்கார சென்னை திட்டம். இத்திட்டத்ற்காக பல லட்சங்களை ஒதுக்கி நகரில் ஆங்காங்கே குப்பை கொட்ட பயன்படுத்தி வந்த பல இடங்களில் பூங்காக்களும், மின்வண்ண விளக்குகளும், அலங்கார வளைவுகளும் அமைக்க பட்டன. இன்னும் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் சென்னை சிறிது அழகுற்றது என்னவோ உண்மைதான்.

ஆனால், இது மட்டும் போதுமா? வேறு வழிகள் என்ன?

1. அரசியல் கட்சிகள் செய்ய வேண்டியவை:
ஏதேனும் அரசியல் விழா, தலைவருக்கு பிறந்த/இறந்த நாள் விழா என்று ஏதேதோ காரணங்களுக்காக பெரிய சுவரொட்டிகளை ஒட்டும் பழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகிறது. எப்படி தேர்தல் ஆணையம் சுவர் விளம்பரங்கள் செய்வதற்கு தடை விதித்து ஆணை பிறப்பித்ததோ அது போல் தலைவர்களும் தொண்டர்களுக்கு கட்டளை இட வேண்டும். மீறுபவர்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். அல்லது நடுநிலையான அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி இது போன்ற செயல்களை கண்காணித்து சட்டப்படி அத்துமீறும் கட்சிகளின் மீது நீதிமன்றங்கள் உதவியுடன் நடவடிக்கை எடுக்கலாம்.


2. சினிமாத்துறை செய்ய வேண்டியவை:
இப்போது நகரின் பெரும்பலான இடங்களில்/சுவர்களில் நாம் பார்க்க நேரிடுவது சினிமா சம்பந்தபட்ட சுவரொட்டிகள் தான். இதற்கு தடைச்சட்டம் கொண்டு வரவேண்டும். மீறும் தயாரிப்பளர்கள்/விளம்பர நிறுவணங்கள்/திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தபட்ட நபர்கள் மீது அரசு இரும்பு கரம் கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், நடிகர்கள் தங்கள் ரசிகர் மற்றும் நற்பணி மன்ற தோழர்களுக்கு தங்கள் பிறந்த நாள்/திரைபட வெளியீட்டு விழா போன்ற சமயங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதை கண்டிப்பாக அனுமதிக்க கூடாது. நடிகர்கள் செய்வார்களா??

3. பொதுமக்கள் செய்ய வேண்டியவை:
பொதுமக்களாகிய நாம், நம் இல்லத் திருமண விழாக்களின் போதும், நம் உறவினர்/நண்பர் இறந்தால் அவருக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு சுவரொட்டி ஒட்டுவதையும் நிறுத்த வேண்டும்.

இவை அனைத்தும் நடப்பின், சுவற்றில் சாணத்தை அடிக்கும் பழக்கமும் (வறட்டிக்கு அல்ல), மாடுகள்/ஆடுகள் சுவற்றில் ஒட்டியிருக்கும் காகிதத்தை திண்ணும் பழக்கமும் மறையும். சென்னை மாநகரமும் சிங்கார நகரமாக மிளிரும்.